Tuesday, August 5, 2014


மண் புழு உரம்
தலைப்பை பார்த்தவுடன் ஏதோ அசைவ சமையல் குறிப்பு என்று நினைத்துவிடாதீர்கள். காய்கறிகள் சுவையாக இருக்க பயிர் வளர்ப்பில் மண் புழு முக்கியம். பயிரோடு சேர்த்து மண் புழுக்களையும் வளர்ப்பதால் மண்ணில் பல்லுயிர் பெருக்கம் ஏற்படும். பல்லுயிர் பெருக்கம் மண்ணிற்கு வளம் சேர்ப்பதோடு, நல்ல விளைச்சலையும் கொடுக்கும்.

பயிர்களின் வேகமான வளர்ச்சிக்கும் சுவையான விளைச்சலுக்கும் இயற்கை உரங்களே சிறந்தது. உழவனின் நண்பன் என்று மண் புழுவை சொல்வதை விட உண்மையான உழவனே மண் புழுதான்! ஒவ்வொரு நாளும் பலமுறை நிலத்திற்கு மேல் வந்து பின் மீண்டும் நிலத்தின் ஆழத்திற்கு செல்கிறது. இப்படி பல முறை நிலத்தை உழுவதால் இவற்றை உழவனின் நண்பன் என்று சொல்வதைவிட உழவன் என்றே சொல்லலாம். இவ்வாறு உழுவதால் ஏற்படும் மெல்லிய துளையின் மூலம் பயிர்களின் வேர்களுக்கு தேவையான காற்றோட்டம் கிடைக்கிறது. மண்புழுவின் எச்சம் நல்ல உரமும் கூட.

இயற்கை விவசாயம்
உரத் தொட்டி
ஒவ்வொரு தோட்டத்திலும் மண் புழு உரம் தயாரிப்புக்கென்றே ஒரு இடம் ஒதுக்கினால் உரத்திற்காக ஆகும் செலவில் பெரும் பகுதியை மிச்சப்படுத்தலாம். மண்புழு உரம் தயாரிப்பு எளிமையானது மற்றும் நடைமுறை சிக்கல் இல்லாததும் கூட! வீட்டில் அல்லது தோட்டதில் மாடு வளர்ப்பவர் என்றால் ஏறத்தாழ செலவே இல்லை என்றுகூட சொல்லலாம். அவ்வளவு சிக்கனமானது மண்புழு உரம்!

மண் புழு உரம் தயாரிப்பிற்கு முன் மண் புழுவை பற்றி தெரிந்து கொள்வோம். 2000-க்கும் மேற்பட்ட மண் புழுக்கள் உலகில் உள்ளன. ஒவ்வொரு பகுதியிலும் இருக்கும் தட்பவெட்பம், நிலத்தடி நீர் மற்றும் மண்புழுவிற்கு கிடைக்கும் உணவு ஆகியவற்றின் அடிப்படையில் மண்ணுக்கு அடியில் சராசரியாக 3 ஆண்டுகள் வாழும் தன்மையுடையது. மண் புழுவின் எண்ணிக்கையை வைத்தே ஒரு மண் வளமாக இருக்கின்றதா இல்லையா என்பதை கண்டுபிடித்துவிடலாம்!

மண்புழு உரம் தயாரிப்பு:

ஒரு அடி அல்லது இரண்டடி உயரமுள்ள தொட்டி போதுமானது. சிலர் ஞெகிழி (பிளாஸ்டிக்) கொண்டு தொட்டு போன்ற அமைப்பை உருவாக்கலாம் என்று சொல்கிறார்கள். ஞெகிழி (பிளாஸ்டிக்) வெப்பத்தை இழுக்கும் தன்மையுடையது. ஆகவே இதை தவிர்ப்பது நல்லது. கூடுமான வரை வெப்பத்தை உள்ளிழுக்காத வகையில் தொட்டி அமைப்பது நல்லது. தொட்டியின் உள்ளே செம்மண்னால் பரப்பி கொள்ளுங்கள். அதற்கு மேல் காய்கறி கழிவுகளையும் காய்ந்த இலைகளையும் பரப்பி கொள்ளுங்கள். இக்கலவையின் மேல் மாட்டு சாணத்தை கொட்ட வேண்டும். 10 நாட்களுக்கு பிறகு மண் புழுக்களை மாட்டு சாணத்தின் மேல் விட வேண்டும். கோழி விரும்பி உண்ணும் உணவில் மண் புழுவிற்கு முதலிடம் உண்டு. எனவே கோழி அல்லது பறவைகள் அதிகம் இருக்கும் இடம் என்றால், மண் புழுவை தொட்டிக்கு மாற்றிய பிறகு தொட்டியை சுற்றி கம்பு நட்டு கோழி வலையால் வேலி போல் அமைத்து கொள்ளுங்கள். இதனால் கோழி உள்ளே வரவது தடுக்கப்படும்.


மண் புழு உரம்
இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் தெளித்து வர வேண்டும். ஒரு மாத காலத்தில் இலைகள் மற்றும் காய்கறிகளை உட்கொண்டு மண் புழு வெளியேற்றும் கழிவுகள் உரங்களாக மேற்பரப்பில் படியும். அடர் பழுப்பு நிறத்தில், குருணை போண்று இருக்கும் மக்கிய நிலையே உரம். 

துளையிடும் மண்புழு
பொதுவாக மண் புழுக்கள் அது வாழும் பரப்பை துளையிட்டு உள் செல்லும் பழக்கம் உடையாதாக இருந்தாலும், அடிக்கடி மேல்புறத்திற்கு வந்து தனக்கு தேவையான காற்றை சுவாசிக்கும். மேலும், கழிவுகளை (உரத்தை) மேற்பரப்பில் விட்டுவிட்டு மீண்டும் துளையிட்டு கீழ் நோக்கி செல்லும் பழக்கம் உடையவை. எனவே பரப்பின் மேல் இருந்து நாம் எளிமையாக உரத்தை எடுத்து கொள்ளலாம். மேல் இருந்து எடுக்க எடுக்க மண் புழுவானது கீழ் நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கும். செம்மண் பகுதியை அடைந்தவுடன் மீண்டும் மாட்டு சாணம், காய்கறிகள் மற்றும் மக்கிய இலைதலைகளால் நிரப்பி அடுத்த சுழற்சிக்கு தயாராகலாம்.

இத்தனை நாட்கள் காத்திருக்க முடியாது, உடனே மண் புழு உரம் வேண்டும் என்று நினைப்பவர்கள் எங்களை தொடர்பு கொள்ளுங்கள். நியாயமான விலையில் அதிகமான மண் புழு உரத்தை அள்ளி செல்லுங்கள்!

தொடர்புக்கு:

தேவர்பிரான் கிருட்டினன்
ரைசா தாவூத்
78670 86806
78670 86803

0 comments:

Post a Comment

Google+